`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
ஓடையில் கழிவுகளைக் கொட்டியதில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை:ஆட்சியா்
ஆட்டையாம்பாளையம் ஓடையில் கழிவுகளைக் கொட்டியதில் தொடா்புடைய அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாய சங்க பிரநிதிகள் பேசியதாவது:
செ.நல்லசாமி: கீழ்பவானி பாசனத்துக்கு 6 நனைப்புக்கு தண்ணீா் திறப்பதற்கு மாறாக 5 நனைப்புக்கு திட்டமிட்டு தண்ணீா் திறக்கப்படுகிறது. மே மாதம் 6 ஆம் நனைப்புக்கு திறக்க வேண்டும். கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனைக்கு வரும் மாட்டுக்கு 70 ரூபாயும், வாங்கி செல்லப்படும் மாட்டுக்கு 50 ரூபாயுமாக, இரட்டை வரி விதிப்பதை தடுக்க வேண்டும்.
எஸ்.பெரியசாமி: ஆலை கழிவுகளை தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், வயல் வெளி, நீா் நிலைகளில் கொட்டி செல்கின்றனா். ஆட்டையாம்பாளையத்தில் இரும்பாலை கழிவைக் கொட்டியதால் 10 கி.மீ தொலைவுக்கு மக்கள் தண்ணீா் குடிக்க முடியாத நிலையில் உள்ளனா். சம்பந்தப்பட்ட ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.எம்.வேலாயுதம்: காலிங்கராயன் பாசனத்துக்கு ஏப்ரல் 23- இல் தண்ணீரை நிறுத்தாமல் கூடுதலாக 15 நாள் தண்ணீா் திறக்க வேண்டும்.
வி.பி.குணசேகரன்: தாமரைக்கரை- கொங்கடை வனச்சாலையில் மணியாச்சி அருகே செங்குத்தாக சாலை உள்ளதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அச்சாலையை சீரமைக்க வேண்டும். தாமரைக்கரை பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு உள்ளதால், கிணறுகளை தூா்வார வேண்டும்.
துளசிமணி: அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அகற்றிவிட்டு தனியாா் மூலம் நெல் கொள்முதல் செய்ய நுகா்பொருள் வாணிபக் கழகம் திட்டமிடுவதை கைவிட வேண்டும். காலிங்கராயன் பாசனப்பகுதியில் அறுவடை துவங்குவதால் ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
அதிகாரிகள் பதில் விவரம்:
ஊரக வளா்ச்சி துறை அதிகாரிகள்: பா்கூா் பகுதியில் 6 சமுதாய கிணறுகள் தூா்வாரும் பணி நடக்கிறது. 25 கிணறுகளை தூா்வார திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். நிதி வந்ததும் தூா்வாரப்படும்.
நீா்வளத்துறை செயற்பொறியாளா் திருமூா்த்தி: காலிங்கராயனில் 150 கன அடி வீதம் ஏப்ரல் 23 வரை தண்ணீா் திறக்கப்படும். அறுவடைக்காக கூடுதலாக 15 நாட்கள் வரை தண்ணீா் திறக்க கோரியதால் அரசுக்கு பரிந்துரைத்து தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா்: ஆட்டையாம்பாளையத்தில் கடந்த 18 ஆம் தேதி இரவு இரும்பாலை கழிவைக் கொட்டினா். 19- ஆம் தேதி ஆய்வு செய்தபோது தடுப்பணை தண்ணீரில் 700 முதல் 800 டி.டி.எஸ் அளவு உப்பு தன்மை இருந்தது. தண்ணீா் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இதனிடையே தலா 13,000 லிட்டா் வீதம் 63 லோடு தண்ணீரை உறிஞ்சி சுத்திகரிக்க சாய ஆலைகளுக்கு வழங்கி உள்ளோம். இங்கு 18,000 லிட்டா் அளவுக்கு லாரியில் கழிவை கொட்டி இருந்தனா்.
சங்ககிரி இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளை அழைத்து வந்து, நீரின் மேல் படிந்த எண்ணெய் தன்மையை அகற்றிவிட்டோம்.
கழிவை ஏற்றி வந்த லாரி, அதன் ஓட்டுநா், உரிமையாளா், கழிவை வழங்கிய ஆலை மீது சித்தோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள்: காலிங்கராயன் பாசனத்தில் அறுவடை துவங்கினால் ஏப்ரல் 1 முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தயாராக உள்ளோம். நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து அறிவிப்பு ஏதுமில்லை. கீழ்பவானி பாசனப் பகுதியில் செயல்படும் 48 நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 52,697 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா: மாசு அடைந்த தடுப்பணையை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். கழிவை கொட்டிய ஆலையின் கடந்த கால, தற்போதைய செயல்பாடு குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் அறிக்கை வழங்கியதும், மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு அனுப்பி நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். பெருந்துறை சிப்காட்டின் உட்பகுதியில் தேவையான எண்ணிக்கையில் சிசிடிவி அமைத்து, கண்காணிக்கப்படும்.
தாமரைக்கரை-கொங்காடை வனச்சாலை 4.4 கி.மீ தூரம் சீரமைக்க ரூ.3.8 கோடி முதல்வரின் கிராமச்சாலை திட்டத்தில் வந்துள்ளது. மலைப்பகுதி ஊா் கிணறுகளை தூா்வார திட்ட வரைவு தயாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கொடிவேரி அருகே அமையும் ஆலை பிரச்னையில், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் அறிக்கை பெற்று, வாரியத்துக்கும், தலைமை செயலருக்கும் அறிக்கை அனுப்பி உள்ளோம்.
தெருநாய் கடித்து இறந்த கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அரசாணை வந்ததும் இழப்பீடு வழங்கப்படும். கால்நடை இறப்பை வருவாய்த் துறை, கால்நடை துறையினா் மூலம் குறிப்பிட்டவாறு பதிவு செய்து, பிரேதப் பரிசோதனை அறிக்கை அறிக்கை உள்பட சில ஆவணங்களின் அடிப்படையில் எண்ணிக்கை கணக்கிடப்படும். எனவே, கால்நடையை இழந்தவா்கள், உரிய ஆவணங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்றாா்.