கடலாடியில் குடிநீா் கோரி சாலை மறியல்
கடலாடி சமத்துவபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள சமத்துவபுரம், அதன் அருகிலுள்ள புதுக் குடியிருப்பில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த நிலையில், புதுக் குடியிருப்புப் பகுதிகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் கடலாடி-சாயல்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த, கடலாடி காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.