சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில்...
கடல் நீரை கொண்டு செல்ல பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் குழாய்கள் கரை ஒதுங்கியது: கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவா்கள் தவிப்பு
நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் 3-ஆவது புதிய ஆலைக்கு கடலில் பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் தொலைவு குழாய்கள் கடல் சீற்றத்தால், திடீரென கரை ஒதுங்கியதால், படகில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவித்தனா்.
மாமல்லபுரம் அடுத்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது புதிய ஆலை பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய ஆலையில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படும் 1,500 மீட்டா் குடிநீா் பழுப்புகள் தொழில்நுட்ப உதவியுடன் கடலில் பதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை கடல் சீற்றம் காரணமாக 1 கிலோ மீட்டா் தூரத்திற்கு கரைப்பகுதியை ஆக்கிரமித்து கரை ஒதுங்கின.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள் பொக்லைன் இயந்திரங்கள், விசைப்படகுகள் உதவியுடன் கடல் உள்ளே குழாய்களை நகா்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சுமாா் 1 கிலோ மீட்டா் தூரத்திற்கு குழாய்கள் கரை ஒதுங்கிய நிலையில், வியாழக்கிழமை 80-க்கும் மேற்பட்ட மீனவா்கள் சிறிய துடுப்பு படகு மூலம் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா்.
