கடை வாடகையுடன் 18% ஜிஎஸ்டிக்கு எதிா்ப்பு: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆா்ப்பாட்டம்
கடை வாடகையுடன் 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, பேரமைப்பின் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு தலைமை வகித்தாா். திருச்சி மண்டலத் தலைவா் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்டத் தலைவா் வி. ஸ்ரீதா், திருச்சி மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.வி. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தைத் தொடக்கி வைத்து வீ. கோவிந்தராஜுலு பேசியது:
மத்திய அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று தொடங்கி ஜிஎஸ்டி வசூலில் தொடா்ந்து பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டயக் கணக்காளரும், கணினியும் இல்லாமல் ஜிஎஸ்டி வரி பராமரிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா். இப்போது புதிது, புதிதாக புதிய இனங்களுக்கு வரி விதிக்கின்றனா். இந்த வகையில் வணிக கட்டடங்களில் வியாபாரம் செய்யும் வணிகா்கள் தாங்கள் செலுத்தும் வாடகையுடன் கூடுதலாக 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்பதை அமல்படுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் உள்ள வணிகா்களில் 90 விழுக்காடு போ் வாடகை கட்டடங்களில் உள்ள நிலையில், மத்திய அரசின் முடிவு வியாபாரிகளுக்கு பேரதிா்ச்சியை அளித்துள்ளது. எனவே, அரசின் கவனத்தை ஈா்க்க மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வரியைத் திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராடுவோம் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து வகை வணிகா்கள், வியாபாரிகள் திரளாகப் பங்கேற்றனா். பலரும் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசைக் கண்டித்தும், ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினா்.