துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
கட்சியின் தலைவர் நான்தான்; அன்புமணி தலைவர் எனக் கூறினால் நடவடிக்கை: ராமதாஸ்
அன்புமணி தன்னை பாமகவின் தலைவர் என்று கூறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதனிடையே ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
"கட்சியின் தலைவராக நான் கடந்த மே 30 ஆம் தேதி நான் பொறுப்பேற்றேன். அதன்பின்னர் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பாமக தலைமையகம் சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது. வேறு எங்கும் நம்முடைய தலைமை அலுவலகம் இல்லை என்பதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வேறு இடங்களில் பாமக தலைமையகம் என்று வைத்திருந்தால் அது சட்டத்திற்குப் புறம்பானது.
அதேபோல கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, ‘நான் தான்' என கூறிக்கொண்டு வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பாமகவில் கெளரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அண்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டு உள்ளது.
அன்புமணியின் பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே காவல்துறை அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறேன். அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் என்னுடைய பெயரை போடக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.