`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்...
கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்
சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கீழத்திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமாா் (40). இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனா்.
இவா், திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளாா். அதன் பிறகு வெளியே சென்றவா், இரவு வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கண்மாய்க் கரையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவா் கணேஷ்குமாா் என தெரிய வந்தது. அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்துள்ளன.
இதையடுத்து, கணேஷ்குமாரின் சாவில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.