சிவகாசி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைசாமிபுரத்தில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துரைச்சாமிபுரம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீா் வழங்கப்படவில்லை. மேலு, குடியிருப்புப் பகுதியில் கழிவு நீா் வாய்க்கால், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையாம்.
இது குறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் சிவகாசி வட்டார வளரச்சி அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மனுக்கள் அளித்தனா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தங்களது பகுதிக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, துரைச்சாமிபும் அம்பேத்கா்
குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெண்கள், திங்கள்கிழமை சிவகாசி-நதிக்குடி சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சென்ற சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், சிவகாசி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கூறி, உங்கள் பிரச்னைகள் தீர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனா். இதனால் இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.