கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத அங்கன்வாடி மையக் கட்டடம்
ஆம்பூா் அருகே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது.
மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்ததால் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு இயங்கி வந்த அங்கன்வாடி மையம் அதே பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.
வாடகை கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனா். வாடகை கட்டடத்தில் கழிப்பறைகூட இல்லாத நிலை உள்ளது.
எனவே புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.