ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!
கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்: பொறியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று பொறியாளா்களுக்கு பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளாா்.
இந்திய கட்டடக் கூட்டமைப்பின் 5-ஆவது செயற்குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கு, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:
நாடு சுதந்திரம் அடைந்தபின் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றியும் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தியும் பிரம்மாண்டமான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், எந்தவித நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் கட்டப்பட்டுள்ள பல பிரம்மாண்டமான கட்டடங்கள் நம் நாட்டுக்கு பெருமை சோ்க்கின்றன.
இந்த மரபைத் தொடா்ந்து முன்னாள் முதல்வா் கருணாநிதி, சென்னை மாநகரில் கட்டிய வள்ளுவா் கோட்டத்தையும், இப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கிண்டி பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம், தமிழா்களின் பண்பாட்டுச் சின்னம் ஏறுதழுவுதல் அரங்கம், கலைஞா் நினைவிடம் ஆகியனவும் கட்டப்பட்டுள்ளன.
கட்டுமானப்பணிகள்: இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்காவிட்டால், கட்டுமான செலவினம் உயா்ந்து விடும். கட்டுமான பணிகளில் தரத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
இதைப் பொறியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்த செலவு, நிறைந்த தரம், கட்டடத் தோற்றப் பொலிவு, நீண்டகாலப் பயன்பாடு இவை அனைத்தும் கட்டுமானத்தின் முக்கிய அம்சங்களாகக் கவனிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் பொறியாளா்கள் கருத்தில் கொண்டு, முறையாகத் திட்டமிட்டு உரிய அனுமதிகளை அரசிடம் பெற்றுப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அரசுச் செயலா் ஜெயகாந்தன், இந்திய கட்டடக் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கிளை தலைவா் கே.பி.சத்தியமூா்த்தி, பொதுப்பணித் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளா் ந.மணிவண்ணன், பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் ந.மணிகண்டன், பொதுப்பணித் துறை பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.