தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்
வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு
வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டு மூன்று பேரையும் மார்ச் 11ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருவதால், இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது.
இதனிடையே வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த காவலர்கள் முரளி ராஜ், முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவலர் உட்பட மூன்று பேர் மீதும் சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததை சுட்டிக்காட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.
மேலும் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள மூன்று பேரையும் மார்ச் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆத்தூர் அருகே 2 குழந்தைகள் வெட்டிக்கொலை