கணவரின் இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்த நடிகை மணிமேகலை!
கணவர் அளிக்கும் இன்ப அதிர்ச்சிக்காக காத்திருந்ததாக நடிகை மணிமேகலை விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கேலியான அந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தொலைக்காட்சிகளில் அரைமணி நேர நேரலை நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை மணிமேகலை. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நகைச்சுவைக் கலந்த சுவாரசியத்துடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
15 ஆண்டுகளாகத் தொகுப்பாளராக உள்ள மணிமேகலை, தன் கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.
மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 சீசன்களிலும் பங்கெடுத்து வந்த மணிமேகலை, முன்னதாக நிறைவு பெற்ற 5-வது சீசன் நிகழ்ச்சியை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில், போட்டியாளராகப் பங்கேற்ற தொகுப்பாளருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். உடனே அவருக்கு ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் சின்ன திரைக்கான சிறந்த தொகுப்பாளர் மற்றும் சிறந்த என்டர்டெயினர் விருதையும் பெற்றார். கடுமையாக உழைத்து சோதனைக் காலத்தையும் வளர்ச்சிக்கான நாள்களாகப் பயன்படுத்திக்கொண்ட மணிமேகலை இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பிறந்தநாளையொட்டி கணவர் இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போவதை விடியோ மூலம் கேலியாகப் பதிவிட்டுள்ளார். அதாவது, அவரின் கண் முன்பே தனது கணவர், நண்பர்களுடன் சேர்ந்து கேக் வாங்கி மறைத்து எடுத்துச் செல்வதாகவும், ஆண்டுதோறும் நள்ளிரவில் கேக் வெட்டும் கணவரின் வழக்கமான இன்ப அதிர்ச்சிக்கு காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | அய்யனார் துணை தொடரில் சிங்கப் பெண்ணே நடிகை!