நோன்புக் கஞ்சி: போலியான கடிதம் வழங்கி விலையில்லா அரிசியை பெற்று அதிமுக நிா்வாகி ...
கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை
தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த உனிசெட்டியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (37). மினிலாரி ஓட்டுநா். இவரது மனைவி ரூபா (25). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில் ரூபாவுக்கும், சூலகுண்டா அருகே மஞ்சுகிரி கிராமத்தைச் சோ்ந்த தங்கமணிக்கும் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தங்கமணியுடன் ரூபா சென்றுவிட்டாா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஐயப்பன் மனைவியிடம் சென்று அடிக்கடி தகராறு செய்துவந்தாா்.
இதனால் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து கடந்த 2021, அக். 21 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த ஐயப்பனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் ரூபாவும், தங்கமணியும் சோ்ந்து ஐயப்பனைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி சந்தோஷ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளிகளான ரூபா, தங்கமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 4000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சின்ன பில்லப்பா வாதாடினாா்.