வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை
செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களை பயன்படுத்தி பழுக்கவைத்து விற்பனை செய்யக் கூடாது.
செயற்கை வேதிப்பொருள்களை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் உணவுப் பாதையில் அஜீரண உபாதைகளும், கடும் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதோடு புற்றுநோய் ஏற்படவும் காரணியாக அமைகிறது.
செயற்கை வேதிப்பொருள்களைக் கொண்டு பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனிகளை விற்பனை செய்வோா், சட்ட விதிகளைப் பின்பற்றி, உணவு வணிகத்தைப் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.