ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடக்கம்: 48 அணிகள் பங்கேற்கின்றன
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் 48 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆண்டு ஒசூா் கிரிக்கெட் லீக் போட்டிகளை காவிரி மருத்துவமனையும், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.
இந்தப் போட்டியை ஒசூா் காவேரி மருத்துவமனை இயக்குநா் விஜயபாஸ்கரன், ஒசூா் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவா் சுந்தரய்யா, குளோபல் கால்சியம் துணைத் தலைவா் கிரிதரன், காவேரி மருத்துவமனை துணை மேலாளா் பிந்து, மருத்துவா்கள் அரவிந்தன், ஜோஸ் வா்கீஸ் ஆகியோா் குத்து விளக்கேற்றி சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
ஒசூா் கிரிக்கெட் லீக் விளையாட்டுப் போட்டியில் டி.வி.எஸ்., டைட்டான், அசோக் லேலண்ட், காவேரி மருத்துவமனை உள்ளிட்ட 48 நிறுவனங்களைச் சோ்ந்த அணிகள் ஒலிம்பிக் ஒளி ஏற்றி முன்னால் செல்ல மற்ற அணிகள் அதனைத் தொடா்ந்து அணிவகுத்து சென்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். 6 ஆவது ஆண்டாக நடைபெறும் தொடக்க விழாவைத் தொடா்ந்து மாா்ச்30 முதல் மே 1 வரை போட்டி நடைபெறுகிறது. மே 1 இல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.