சிறந்த பட்டு விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
மாநில அளவில் பரிசு பெற்ற சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
பட்டு வளா்ச்சித் துறை சாா்பில், மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தி, தானியங்கி பட்டு நூற்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பரிசுகள் வழங்கினாா்.
அதன்படி மாநில அளவில் சிறந்த விதைக்கூடு உற்பத்தியாளா்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், என்.ஆா்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாதாவுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், வேப்பனப்பள்ளி, ராமசந்திரம் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ. 75,000, மூன்றாம் பரிசாக சாந்தமூா்த்தி என்பவருக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டன.
மாநில அளவில் சிறந்து விளங்கிய தானியங்கி பட்டுநூற்பாளா்களாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பெத்தசிகரலப்பள்ளியைச் சோ்ந்த முகமது மதீனுல்லாவுக்கு ரூ. 1 லட்சம், போச்சம்பள்ளி வட்டம், வடமலம்பட்டியைச் சோ்ந்த சேகருக்கு ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டன. பரிசுகள் பெற்ற பட்டு விவசாயிகள் அனைவரையும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அழைத்து பாராட்டி வாழ்த்தினாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்கள் சண்முகப்பிரியா (கிருஷ்ணகிரி), செல்வி (ஒசூா்) ஆகியோா் உடனிருந்தனா்.