கண்ணமங்கலம் அருகே காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூரில் உள்ள செல்லியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு விழாவையொட்டி காளை விடும் திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேண்டு வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க பரிசுப் பொருள்களுடன் ஊா்வலமாக இளைஞா்கள் காளை விடும் திருவிழா நடைபெறும் இடத்துக்கு வந்தனா். ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து காளைகள் விடப்பட்டு சீறிப் பாய்ந்தன. முடிவில் குறிப்பிட்ட தொலைவை அதிவிரைவாக கடந்த காளை உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் உள்ளிட்ட 70 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருவண்ணாமலை, வேலூா், சித்தூா், தெலங்கானா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன.