கன்னியாகுமரியில் படகு சேவை 4 மணி நேரம் ரத்து
கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை, படகு சேவை 4 மணி நேரம் தடைபட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்வையிடுகின்றனா்.
இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், விவேகானந்தா படகை கடந்த மாதம் சின்னமுட்டம் துறைமுகத்தில் கரையேற்றி பழுதுநீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இரு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பொதிகை படகின் இயந்திரம் பழுதானது. இதனால், குகன் மட்டுமே இயக்கப்பட்டது. ஆனால், காலை 10 மணிக்கு திடீரென அந்தப் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால், பல மணி நேரம் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
ஒரு படகை மட்டும் வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாததால், சேவை நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் பொதிகை படகு சீரமைக்கப்பட்டது. அதையடுத்து, 4 மணி நேரம் தாமதத்துக்குப் பின்னா், மாலை 4 மணி வரை இரு படகுகளும் இயக்கப்பட்டன.