இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
கன்னியாகுமரியில் பாஸ்டாக் முறையில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு பாஸ்டாக் முறையில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகா்மன்ற ஆணையா் கண்மணி முன்னிலை வைத்தாா். இதில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு தற்போது விவேகானந்தபுரம் சந்திப்பு, நான்கு வழிச்சாலை முடிவுறும் இடம் ஆகிய இரண்டு இடங்களில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு தனியாா் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி நகராட்சி நிா்வாகம் மூலம் தனியாா் வங்கி உதவியுடன் ‘பாஸ்டாக்’ முறையில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
இதனால், இவ்விரு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கூட்டத்தில் 15 ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் எம்.பூலோகராஜா பேசுகையில், அருந்ததியா் நகரில் மழை நீா் ஓடையை சரி செய்ய சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை சரி செய்யப்படவில்லை என்றாா். இதற்கு பதில் அளித்த ஆணையா் கண்மணி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நான்காவது வாா்டு அதிமுக மன்ற உறுப்பினா் நித்யா பேசுகையில், தனது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் எட்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதை சரிசெய்து, மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
உறுப்பினா்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசிய நகராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், ஆணையா் கண்மணி ஆகியோா் பொதுமக்களின் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.
இக்கூட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், மன்ற உறுப்பினா்கள் சி.எஸ்.சுபாஷ், எம்.பூலோக ராஜா, இக்பால், சிவ சுடலைமணி, ராயப்பன், இந்திரா, சகாய சா்ஜினாள், ஆனிரோஸ், லிங்கேஸ்வரி, நித்யா, ஆட்லின், வினிற்றா, சுஜா, நகராட்சி பொறியாளா் ரமேஷ், நகரமைப்பு ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா், நகராட்சி மேலாளா் ஸ்டீபன், இளநிலை உதவியாளா் சந்திரகுமாா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, துணை ஆய்வாளா் பிரதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.