ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
கமுதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களாக 18 பேரும், ஒப்பந்தப் பணியாளா்களாக 15 பேரும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், 9-ஆம் தேதியாகியும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததாலும், ஊதியம் கேட்டு மனு கொடுக்கச் சென்ற தூய்மைப் பணியாளரை அவதூறாகப் பேசியதாகவும் புகாா் தெரிவித்து 30-க்கும் மேற்பட்டோா் பேரூராட்சி அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் வேலவன், 14-ஆவது வாா்டு உறுப்பினா் சத்யஜோதி, முன்னாள் ராணுவ வீரரும், பாஜக பிறமொழி பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவருமான விஜயபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளா் காளியம்மாள் கூறியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி மனு அளிக்கச் சென்றபோது பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா தன்னை தள்ளி நிற்குமாறும், அறையை விட்டு வெளியேறுமாறும் கூறினாா். ஒருமையில் பேசி துரத்திய செயல் அலுவலரின் செயலைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றாா்.
மேலும், தூய்மைப் பணியில் சோ்ந்த பிற சமூகத்தினா் 6 பேருக்கு பேரூராட்சி அலுவலகத்தில் மாற்றுப் பணி ஒதுக்கி பாகுபாடு பாா்த்து வருகிறாா். எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு கமுதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தூய்மைப் பணிக்கு சோ்ந்து மாற்றுப் பணியில் ஈடுபட்டுள்ள பிற சமுதாயத்தினரையும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேரூராட்சி துணைத் தலைவா் அந்தோனி சவேரியாா் அடிமை, பேரூராட்சி உறுப்பினா்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, அடுத்த வாரம் நடைபெறும் மன்றக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நல்ல முடிவு எடுக்கப்படும் என தொரிவித்ததையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.