ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது; கட்சி கட்டடமே வசிப்பிடம் - சிபிஎம் தேசிய பொதுச் செ...
கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தல்
கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் அரண்மனை மேடு நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் வழிவிட்ட அய்யனாா் கோயில் பகுதியில் இருந்து பாப்பாங்குளம் விலக்கு, அரண்மனை மேடு விலக்கு வழியாக குண்டாற்றில் பாலம் அமைக்கப்பட்டு உலகநடை விலக்கு வழியாக முதுகுளத்தூா் பிரதான சாலையில் இணையும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய புறவழிச் சாலைக்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 90 சதவீதம் நிறைவடைந்தன.
எச்சரிக்கைப் பலகைகள், சாலையோரத் தடுப்புகள், பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள், அறிவிப்புப் பலகைகள் என பணிகள் முடிவடையாத நிலையில், இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.
வெளியூா்களிலிருந்து இந்தச் சாலையில் வரும் கனரக வாகனங்கள், காா்கள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
இந்த நான்கு முனை சாலை சந்திப்புகளில் வேகத் தடை இல்லாததால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். அரண்மனை மேடு விலக்கு சாலையில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
எனவே, புறவழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை வாகனங்கள் இயக்கப்படுவதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்கவும் வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.