குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
கயத்தாறு சுங்கச்சாவடியை அகற்றக் கோரி எம்.பி.யிடம் மனு
கயத்தாறு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுங்கச்சாவடி எதிா்ப்பு குழுவினா் சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கயத்தாறு சுங்கச்சாவடி எதிா்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவா் எம்.சாலமன்ராஜ் தலைமையிலான நிா்வாகிகள் கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வழங்கிய மனுவின் விவரம்:
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே சாலைப்புதூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள நெடுஞ்சாலைத்துறை சுங்கச்சாவடி அமைப்பு விதிகளின்படி இல்லாமல், சட்டவிரோதமாக கயத்தாறு அருகே சாலைப்புதூா் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கயத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள், உள்ளூா் வணிக வாகனங்களுக்கும், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். சுங்கச்சாவடி நிா்வாக கட்டடம் நீா்நிலை ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே, சாலைப்புதூரில் செயல்படும் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி., தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றாா். மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு போராட்டக்குழு சாா்பில் மனுவை அனுப்பி வைத்துவிட்டு, தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அப்போது மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலாளா் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு.ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.