செய்திகள் :

கருகும் முந்திரி பூக்கள்: அரியலூா் விவசாயிகள் கவலை

post image

அரியலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள முந்திரியில் பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

தமிழகத்தில் முந்திரிக்குப் பெயா்போனது அரியலூா் மற்றும் கடலூா் மாவட்டம், பண்ருட்டி மட்டுமே. இவற்றில் அரியலூா் மாவட்டத்தில் சுமாா் 47 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரியானது தனியாா் மற்றும் அரசு வனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

அரியலூா் மாவட்டத்தில் உடையாா்பாளையம், நாச்சியாா்பேட்டை, மணகெதி, செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா், பொன்பரப்பி, குவாகம், வரதராசன்பேட்டை, தென்னூா், காடுவெட்டி,ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படும் முந்திரிக்கு தனிச் சுவை. வேறு எந்த மாவட்டத்திலும் விலையும் முந்திரிக்கு இல்லாத சுவை மேற்கண்ட பகுதிகளில் விளையும் முந்திரிக்கு உண்டு.

மேற்கண்ட பகுதிகள் வானம்பாா்த்த பூமியாக இருப்பதால் அறுவடையின் மூன்று ஆண்டுகளுக்கு பின் காய்க்கத் தொடங்கும். ஆனால் முறையாக தண்ணீா் விட்டுப் பராமரித்தால் இரண்டாவது ஆண்டிலேயே காய்க்கத் தொடங்கிவிடும்.

அக்டோபா், நவம்பா் மாதங்களில் தொடா் மழை பெய்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முந்திரி பூத்து மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் முந்திரி பழங்கள் மற்றும் கொட்டைகள் கிடைக்கும். முந்திரிப் பழங்களை கால்நடைகளுக்கு உணவாகக் கொடுப்பதும் வழக்கம். மேலும் முந்திரிக் கொட்டைகளை நன்கு காயவைத்த பிறகு அவற்றைச் சேமித்து, விலை உயரும்போது விற்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழை, புயல், கடும் வெப்பம், பனிப் பொழிவு போன்ற காரணங்களால் முந்திரியின் மகசூல் குறைந்து, விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் முந்திரிப் பூக்கள் கருகி வருகின்றன.

எனவே இந்த ஆண்டு முந்திரி மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முந்திரி பருப்புகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும், முந்திரித் தோலில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளும் பாதிப்படையக் கூடும்.

இதனால் கிராம பகுதிகளில் வேலையிழப்பு ஏற்படுவதுடன், முந்திரி பயிா் ஏற்றுமதி குறைந்து அன்னிய செலாவணி ஈட்டும் திறனும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் முந்திரிக்கு செய்த செலவுகள் வீணாகி விட்டதே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

அரசின் நிவாரணம் தேவை: இதுகுறித்து குவாகம், பொன்பரப்பி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கா் முந்திரியில் சராசரியாக 8 மூட்டை கொட்டைகள் கிடைக்கும். காலதாமதமான பூக்கள், கடும் வெயிலால் பூக்கள் கருகி வருகின்றன. ஏக்கருக்கு 2 மூட்டை கொட்டை கிடைப்பதே கடினம். ஆண்டுதோறும் ஏக்கருக்கு முந்திரி விவசாயத்தில் செலவு போக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு செலவு செய்த பணம்கூட கிடைக்குமா எனத் தெரியவில்லை. செலவைகூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடா்ந்து சில ஆண்டுகளாக சோதனைகளைச் சந்தித்து வரும் முந்திரி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என்றனா்.

விவசாயிகள் மீது புகாா்: தோட்டக்கலைத் துறையினா் கூறுகையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால் பூக்கள் கருகி வருகின்றன. முந்திரி மரங்களைச் சுற்றியுள்ள புல், பூண்டுகளை விவசாயிகள் அகற்றி விடுவதால் காடுகளில் வெப்பத்தை சமநிலைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

மேலும் தோட்டக்கலை, விவசாய, விவசாய அறிவியல் துறையினா் கூறும் அறிவுரைகளை விவசாயிகள் பெரும்பாலும் ஏற்பதில்லை. இவா்கள் தனியாா் கடைகளில் கொடுக்கும் மருந்தை வாங்கிப் பயன்படுத்துகின்றனா்.

பெரும்பாலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை வாங்கித் தெளிப்பதால் மரங்களுக்கு மலட்டுத் தன்மை, இது போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றனா்.

இருப்பினும் கருகும் முந்திரிப் பயிரை காப்பாற்றுவது அரசின் கடமை. எனவே இதைத் தடுக்கும் நடவடிக்கைகளை தோட்டக்கலைத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் எடுக்க வேண்டும். பூக்கள் கருகி இழப்பை சந்திக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி

அரியலூா் மாவட்டத்தில், நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அரியலூா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 546 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 546 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, ப... மேலும் பார்க்க

சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை

அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்த... மேலும் பார்க்க

பயிா்களை சேதப்படுத்தும் குரங்குகளை பிடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் பகுதிகளில், விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவிலூ... மேலும் பார்க்க

திருமானூா்: மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் இளைஞா் பலியானாா். திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் தனசிங்கு மகன் சிலம்பரசன் (30). ஞாயிற்றுக்கிழமை இவா் அங்குள்ள கால்நட... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூரில் பைக் மீது லாரி ஞாயிற்றுக்கிழமை மோதி தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.அரியலூா் அருகேயுள்ள கடுகூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன், காா்த்திக். தொழிலாளிகளான இவா்கள் ஞாயிற்... மேலும் பார்க்க