சுப்புராயபுரம் ரயில்வே கேட்டில் மாற்றுப் பாதை அமைக்கக் கோரிக்கை
அரியலூா் அருகேயுள்ள சுப்புராயபுரம் ரயில்வே கேட் பகுதியில், அங்கு மாற்றுப் பாதை அமைத்தப் பிறகு சுரங்கப் பாதையை அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு: திருச்சி-சென்னை ரயில்வே பாதையில் சுப்புராயபுரம் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு, அங்கு சுரங்கப் பாதை அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், அந்த கேட் வழியே செல்லும் எங்கள் ஊா் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் நீண்ட தூரம் சென்று சுற்று பாதையில் செல்ல வேண்டும். எனவே, சுரங்க பாதை அமைக்கவுள்ள இடத்தின் அருகே மாற்றுப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
திருவெங்கனூா் கிராமத்தை சோ்ந்த அம்பேத்கா் நகரை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு: எங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் இட வசதியின்றி ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.