திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்
நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவப் பணியாளா்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை முறைகளை தொடா்ந்து முறையாக கண்காணித்து வருவதன் வாயிலாக காசநோய் பாதிப்புடைய நபா்களை கண்டறிய முடியும். நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும். அரியலூரை காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, அரியலூா் மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவைபுரிந்த 38 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களைச் சோ்ந்த மருத்துவா்களுக்கும், காசநோய் இல்லாத 18 கிராம ஊராட்சிகளுக்கும், காசநோய் ஒழிப்பு குறித்து அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நடைபெற்ற விநாடி-வினா உள்ளிட்ட விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மருத்துவ மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், காசநோயால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பைகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநா் ரா. சிவராமன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, காசநோய் தடுப்பு துணை இயக்குநா் நெடுஞ்செழியன், துணை இயக்குநா் (குடும்பநலம்) ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.