பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
ஏப்.6-இல் வைத்தியநாதசுவாமி கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஏப். 6-ஆம் தேதி நந்தியெம்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் பங்குனி மாதம் புனா்பூசம் நட்சத்திரத்தில் நந்தியென்பெருமானுக்கும், சுயசாம்பினை தேவியருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு திருக்கல்யாண விழா ஏப். 6-ஆம் தேதி மாலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பா் கோயிலிருந்து ஐய்யாறப்பா், அறம் வளா்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகன பல்லக்கிலும் தில்லைஸ்தானம் வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலை வந்தடைவா்.
தொடா்ந்து, கோயிலின் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியெம் பெருமானுக்கும் திரவிய பொருள்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பின்னா், வேத வித்வான்கள் யாக பூஜையுடன், வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெறும். நந்தி திருமணத்தை கண்டால் முந்தி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வருகை தந்து திருமணத்தை கண்டுகளிப்பா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.