பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!
அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா்.
தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அரியலூா் மாவட்டத்தில், 45 மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வை 4,187 மாணவா்கள், 4, 384 மாணவிகள் என 8,571 போ் எழுதினா். அதேபோல், தனித்தோ்வா்களில் தலா 40 ஆண்கள், பெண்கள் என 80 நபா்கள் தோ்வு எழுதினா்.
செவ்வாய்க்கிழமை தோ்வு எழுதி முடித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் தோ்வு அறைகளில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு பாடங்கள் நடத்திய ஆசிரியா்களை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனா்.
மேலும் மாணவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத் தழுவி பிரியாவிடை பெற்றுக்கொண்டனா். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கவுள்ளது.