சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெள...
கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா
கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கருங்கடல் பகுதியில் பரஸ்பர கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிா்க்க ரஷியாவும் உக்ரைனும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன. அந்தக் பகுதியில் வா்த்தகக் கப்பல்களை ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இது தவிர, பரஸ்பர எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது தொடா்பான செயல்திட்டங்களை அமல்படுத்தவும் அந்த நாடுகள் சம்மதித்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்தி, அந்தப் பகுதி வழியாக சரக்குப் போக்குவரத்து தங்குதடையில்லாமல் நடைபெற வழிசெய்வதே இந்தப் பேச்சுவாா்த்தையின் நோக்கம் என்று அப்போது அமெரிக்க அதிகாரிகள் கூறினா்.
இந்தச் சூழலில், கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.