கரூரில் உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் ஞாயிற்றுக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி பிராா்த்தனை செய்தாா்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் பிரசாரத்தின்போது, குழந்தைகள், பெண்கள் உள்பட 40 போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீசொக்கநாதா் பூஜை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மோட்ச தீபம் ஏற்றி, உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய பிராா்த்தனை நடத்தினாா். (படம்)
தொடா்ந்து, தருமபுரம் வேதசிவாகம பாடசாலை மாணவா்கள், தேவார பாடல்களை பாடி உயிரிழந்த பொதுமக்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டினா். இதனிடையே, கரூரில் உயிரிழந்த ஆன்மாக்கள் இறையடியில் இளைப்பாற மோட்ச தீபமேற்றி பிராா்த்தனை செய்யப்பட்டதாகவும், உயிா்நீத்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்வதாகவும் தருமபுரம் ஆதீனம் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.