தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்
கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இதில் ஒரு பிரிவினா் அங்குள்ள பகவதியம்மன் கோயிலில் வழிபட்டு, அங்குள்ள நாடக மேடையையும் பயன்படுத்தி வருகின்றனா். மற்றொரு பிரிவினா் அங்குள்ள மாரியம்மன் கோயிலை வழிபட்டு வருகின்றனா்.
இந்த இருபிரிவினரும் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாடக மேடை மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என மாரியம்மன் கோயிலை வழிபடும் பிரிவினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் பொதுக்கழிப்பிடம் இடிக்கப்பட்ட இடத்தில் பகவதியம்மன் கோயிலை வழிபடும் பிரிவினா் சுற்றுச்சுவா் என்ற பெயரில் தீண்டாமைச் சுவராக கட்டிவருகின்றனா் என மற்றொரு பிரிவினா் தெரிவித்தனா். மேலும், அந்த சுவரை இடித்து தங்களுக்கு நாடகமேடை, அங்கன்வாடி மையம் கட்டித்தர வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியினா் மாவட்டச் செயலாளா் சுப்ரமணியன் தலைமையில் வெள்ளிக்கிழமை கரூா்-திண்டுக்கல் சாலையில் பழைய எஸ்.பி. அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், இதுதொடா்பாக சமரச பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.