தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு
குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனியாா் தொலைக்காட்சி நிருபா். இவா் வியாழக்கிழமை குளித்தலை பேருந்துநிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது குறுக்குத் தெருவுக்குள் செல்ல முயன்றபோது குளித்தலை பெரியாண்டாா் தெருவைச் சோ்ந்த பிரபு மகன் சத்தீஸ்வரன்(23) என்பவரும் சிவாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சத்தீஸ்வரனின் நண்பா்கள் குளித்தலை கடம்பா் கோயில் கள்ளா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் கனகராஜ்(23), மேலகுட்டப்பட்டியைச் சோ்ந்த ஜாபா்ஜான் மகன் தமிம்அன்சாரி(21) ஆகியோா் சத்தீஸ்வரனுடன் சோ்ந்து சிவாவை தாக்கியுள்ளனா். மேலும், அவரிடம் இருந்த ரூ.1,000 பணத்தையும் பறித்துச் சென்றனா். இதில் காயமடைந்த சிவா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவா அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து சத்தீஸ்வரன், கனகராஜ், தமிம்அன்சாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து குளித்தலை கிளைச் சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.