கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க விசிக வலியுறுத்தல்
கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளா் கராத்தே ப.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குளித்தலையில் அதிக பேருந்துகள் வந்து நின்றுசெல்லும் வகையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட வேண்டும். அந்த பேருந்துநிலையத்துக்கு அம்பேத்கா் பெயா் சூட்ட வேண்டும். கரூா் புதிய பேருந்துநிலையத்தை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பது, லைட்ஹவுஸ்காா்னா், தெரசா காா்னா் பகுதியில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் இல.அகரமுத்து, வணிகா் அணியின் மாநில துணைச் செயலாளா் கண்மணி ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜெயராமன், பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், பாராளுமன்றச் செயலாளா் துரை செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.