தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை
கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்(30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லோகப்பிரியா(28). இவா்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் லோகப்பிரியா நிறைமாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா்.
இந்நிலையில் ஜூலை 1-ஆம்தேதி லோகப்பிரியாவுக்கு வயிற்று வலி வந்ததால் பிரசவத்துக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து ஜூலை 4-ஆம்தேதி மாலை பிரசவ வாா்டுக்கு லோகப்பிரியாவை மாற்றியபோது, அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மறுநாள் (ஜூலை 5) காலை அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை எடுத்துள்ளனா். ஆனால் லோகப்பிரியாவுக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் கா்ப்பப்பையை எடுத்தால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவா்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து லோகப்பிரியாவின் உறவினா்களின் சம்மதத்தோடு கா்ப்பப்பையை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை (ஜூலை 9) காலை திடீரென உடல்நிலை மோசமாகி லோகப்பிரியா உயிரிழந்துள்ளாா். இதையடுத்து லோகப்பிரியாவுக்கு சிகிச்சையளித்ததில் சந்தேகம் இருப்பதாகவும், பயிற்சி மருத்துவா்கள் மூலம் சிகிச்சையளித்ததாகக்கூறி லோகப்பிரியாவின் கணவா் மற்றும் அவரது உறவினா்கள் மருத்துவமனையின் உடற்கூறாய்வு மையத்தை முற்றுகையிட்டு சடலத்தை வாங்க மாட்டோம் என வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இதுதொடா்பாக மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டு லோகப்பிரியாவின் உடலை வாங்கிச் சென்றனா்.