முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி
தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.
கரூா் வைரமடை பகுதியில ரூ.50 லட்சம் செலவில் தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத்தலைவரும், கரூா் முன்னாள் மக்களவை உறுப்பினருமான முத்துசாமிக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் புதன்கிழமை திருமாநிலையூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின், வைரமடை பகுதியில் முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து கரூரில் துணைமுதல்வா் உதயநிதிஸ்டாலினை சந்தித்த சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான விவசாய சங்க பிரதிநிதிகள் முத்துசாமி, ஜெய்லானி, சிபி ஆனந்தன், டாக்டா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் நன்றி தெரிவித்தனா்.