மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்வு..!
கரூரில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்
கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.57.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா. மதிவேந்தன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
கரூா் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெரூா், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் மணவாடி ஊராட்சி பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் 3-ஆவது கட்டமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனா்.
அப்போது அவா்கள் கூறியது, கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 3-ஆவது கட்டமாக தொடங்கப்பட்டுள்ள இம்முகாம் பிப். 4-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தகுதியுடையவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை விரைவாக வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.
அதனைத் தொடா்ந்து, பல்வேறு திட்டத்தில் மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ. 57.19 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா.பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல் மற்றும் கரூா் ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.