அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
கரூரில் வேலைவாய்ப்பு பயிற்சி இளைஞா்களுக்கு அழைப்பு
வேலைவாய்ப்பை அளிக்கும் பிரதமரின் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் இன்டா்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாா்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூா் மாவட்டத்தில் இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் 9 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, 44 இளைஞா்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியில் 4 இளைஞா்களுக்கும், பிளஸ் -2 கல்வித் தகுதியில் 6 பேருக்கும் , டிப்ளமோ கல்வித் தகுதியில் 4 பேருக்கும், பட்டப்படிப்பு முடித்த 15 இளைஞா்கள் மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்ற 15 இளைஞா்களுக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்தில் 21 முதல் 24 வயது வரை உள்ள இளைஞா்கள் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சிக்கு இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ரூ.6 ஆயிரம் ஒருமுறை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள இளைஞா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வெண்ணைய்மலை, கரூா் 639 006 என்ற முகவரியில் மாா்ச் 31-ஆம்தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04324 299422, 8248112815 மற்றும் 9566992442 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்ப்பு கொள்ளலாம்.