கரூர்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு; தற்போது உயிரிழந்தவர் யார்?
நேற்று கரூரில் நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் உயிரிழந்திருந்தனர்... காயமடைந்திருந்தனர்.
இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திருந்தனர்.
இப்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆக, பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது உயிரிழந்தவரின் பெயர் கவின். 31 வயதாகும் இவர் கரூர் தொழிற்பேட்டையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நேற்று இரவு முதல் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்து இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்போது சிகிச்சைக்கு பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

புள்ளிவிவரங்கள்
தற்போது இவருடன் சேர்த்து 14 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நடந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவலின் படி, 200 கரூரை சேர்ந்த மருத்துவர்கள், 145 பிற மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.