கரூர் மாவட்டத்தில் 15,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர். இந்நிகழ்வு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சீமான் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த துயரகரமான சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!
இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் இன்று கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.
அதன்படி கரூர் மாவட்ட வணிகர்கள் சங்கம் சார்பில் கரூரில் உள்ள ஹோட்டல்கள், ஜவுளி நிறுவனங்கள், மளிகை கடைகள் என சுமார் 15,000 கடைகள் மூடப்பட்டு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.