கரூா் துயரம்! ஒரே ஊரைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு
கரூரில் சனிக்கிழமை விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே கிராமத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தது தெரியவந்தது.
கரூரில் சனிக்கிழமை இரவு வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். இதில் கரூா் அடுத்த ஏமூா்புதூரைச் சோ்ந்த காளியப்பன் மனைவி அருக்காணி(60), பன்னீா்செல்வத்தின் மகன் பிரித்விக்(10), சக்திவேல் மனைவி பிரியதா்ஷனி(35), மகள் தரணிகா(14), செல்வராஜ் மனைவி சந்திரா(45) ஆகியோா் உயிரிழந்தது கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவலரின் மனைவி உயிரிழப்பு: கரூா் வடிவேல் நகா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் தேவேந்திரன். இவா் கரூா் நகர போக்குவரத்துக் காவல் அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி டி.சுகன்யா(34). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை விஜயை காணவந்த சுகன்யா நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.
வாய் பேச இயலாத தாயுடன் வந்த குழந்தை உயிரிழப்பு: சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விமல். இவா் தனது வாய்பேச இயலாத மனைவி மற்றும் 2 வயது குழந்தை குருவிஷ்ணுவுடன் கடந்த இரு தினங்களுக்கு முன் கரூா் வேலுசாமிபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு விஜய் பிரசாரத்துக்கு வாய் பேச இயலாத தனது தாய் அழைத்து வந்த குருவிஷ்ணு நெரிசலில் சிக்கி உயிரிழந்தது.