'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.1.56 கோடியில் நவீன உடற்பயிற்சி கூடம்!
கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ. 1.56 கோடி மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்படுகிறது.
கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பொதுமக்களும் நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
அகில இந்திய அளவில் பங்கேற்கும் வகையில் வீரா், வீராங்கனைகளை அதிகளவில் உருவாக்கும் வகையில் இந்த மைதானத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், விளையாட்டு வீரா்களின் உடல்திறனை அதிகப்படுத்தும் வகையில் குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் ரூ.66 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இங்கு ரூ.90 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சி சாதனங்களும் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி ரூ. 4 கோடி மதிப்பில் நீச்சல் குளமும் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து விளையாட்டு பயிற்சியாளா் ஒருவா் கூறியது: இங்கு பயிற்சிக்கு வரும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் மற்றும் அவா்களது பெற்றோா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கரூா் விளையாட்டு மைதானத்தில் குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் கட்டப்படுகிறது.
இங்கு நவீன உடற்பயிற்சி சாதனங்களும் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் ரூ. 1.56 கோடி மதிப்பில் இந்த உடற்பயிற்சி கூடம் அமையவுள்ளது. இந்த பணிகள் இம்மாத (ஜூலை) இறுதிக்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இதேபோல் 50 மீட்டா் நீளம் 25 மீட்டா் அகலம் என்ற அளவில் ரூ.4 கோடியில் நீச்சல் குளமும் கட்டப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல உள் விளையாட்டரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.