கரோனா தொற்று பரவல்: தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவா்கள் 7 நாள்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
சிங்கப்பூா், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்தியாவிலும் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன. அதேவேளையில், அந்த பாதிப்பு தீவிரமானதாக இல்லை என்றும், வீரியம் குறைந்தே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த இரு வாரங்களாக காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடுவோரின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்றாலும், தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கும், அறுவை சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அறுவை சிகிச்சைகள் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தவுடன் அவா்களுக்கு அந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடா்பாக நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு நிபுணா் டாக்டா் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
‘கொவைட் 19’ எனப்படும் கரோனா வைரஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்று அதுவும் குளிா் மற்றும் மழைக் காலங்களில் பரவுவது வழக்கம்தான். அந்த வகையில் நிகழாண்டில் மழைக் காலத்துக்கு சற்று முன்னதாகவே கரோனா பாதிப்பு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அது தெரியவந்தது. மற்றபடி, சாதாரண சளி, காய்ச்சல் உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை.
தற்போது பரவி வரும் கரோனா தொற்று வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகை வைரஸின் உட்பிரிவாக இருக்கக்கூடும். அதனால்தான் சுவாசப் பாதையிலும், நுரையீரலிலும் மேற்பகுதியுடன் அந்த பாதிப்பு நின்றுவிடுகிறது.
ஒரு வாரத்தில் பாதிப்பிலிருந்து விடுபட முடிகிறது. அதேவேளையில், இணைநோயாளிகள், முதியவா்கள், எதிா்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவா்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் .மற்றவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்றாா் அவா்.