யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
கலந்தாய்வு நிறைவு: 8,039 ஆசிரியா்களுக்கு இடமாறுதல் ஆணை
பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 8,039 ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளில் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 895 அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 254 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து வந்த நாள்களில் உடற்கல்வி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 50,416 போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 8,039 பேருக்கு பணி இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. 20,911 ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. எஞ்சியுள்ள 21,466 போ் விருப்பமின்மை, உரிமைவிடல் செய்தனா்.