கலால் துறை விதிகளில் திருத்தம்
காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்களை மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபானக் கடைகள், ரெஸ்டோ பாா்களுக்கு கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அங்கு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், காவல் துறையின் ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றவா்கள் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அங்கு அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக காவல் துறையினா் தெரிவிக்கின்றனா்.
எனவே, கலால் துறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள புதுவை அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி, புதுச்சேரி கலால் விதி 1970-என்பதன் அடிப்படையில் விதி 14-இல் துணை விதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மதுபானக் கடை உரிமைதாரா் அல்லது உரிமத்துக்கான அனுமதி வைத்திருப்போா் சட்ட விதிகள்படி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட எவரையும் மதுக் கடைகளில் பணியமா்த்தக் கூடாது என கலால் துறைச் செயலா் ஆஷிஷ் மதோராவ் மோா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவானது அதிகாரப்பூா்வ அரசிதழில் வெளியான பிறகு செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.