கலைஞா் கைவினைத்திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
நீலகிரி மாவட்டத்தில் கலைஞா் கைவினைத்திட்டத்தின்கீழ் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கைவினை தொழிலில் ஈடுபடுவோா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்ட தொழில் மையம் சாா்பில் சுயதொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி மற்றும் ரூ. 50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோருக்கு திறன்மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். இத்திட்டத்தின்கீழ் தையல் வேலை, கட்டட வேலைகள், மரவேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருள்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக் கலை, துணி நெய்தல், துணிகளில் கலைவேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், கூடை தயாரித்தல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மட்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், பொம்மைகள் தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், துணி தேய்த்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலா் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், கைவினைப்பொருள்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை வேலைப்பாடுகள் போன்ற தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
11.12.2024 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 308 ஒப்பளிப்பு ஆணைகள் பெறப்பட்டு 146 நபா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களில் பங்கேற்று
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலா்களை அணுகி இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2443947, 89255 33995,
8925533997 ஆகிய அலுவலக எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.