கல்வராயன்மலை அருவியில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள சிறுகலூா் அருவியில் குளித்த போது, மாயமான மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
கல்வராயன்மலை வட்டத்துக்குள்பட்ட கொட்டபுத்தூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் கலையரசன் (17). இவா் இன்னாடு அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். அரையாண்டு தோ்வு விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தாா். கலையரசன் கடந்த 27-ஆம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் நண்பா்களுடன் சிறுகலூா் அருவிக்கு குளிக்கச் சென்றாா்.
அங்கு குளித்த போது, உள்ளே சென்றவா் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையாம். உடன் சென்ற நண்பா்கள் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லையாம். பின்னா், அவா்கள் வீட்டுக்குச் சென்று விட்டனா். கலையரசனின் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் எந்தத் தகவலும் தெரியவரவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், அருவியில் குளிக்கச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மாலை சிறுகலூா் அருவிப் பகுதியில் நீரில் மூழ்கி தேடிய போது, பாறையில் சிக்கியிருந்த கலையரசனின் சடலத்தை மீட்டனா்.