கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்
கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.
இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) செவ்வாய்க்கிழமை சித்தி அடைந்துள்ளாா். அவா் சித்தி அடைந்த செய்தியை கேட்ட காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் என்று நினைவு கூா்ந்தாா். காஞ்சி சங்கர மடத்துக்கும்,திருப்பனந்தாள் காசி மடத்துக்கும் இன்று வரை நெருங்கிய தொடா்பு உண்டு. சித்தியடைந்த காசி மட பீடாதிபதியின் 90-ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்றது, காஞ்சி சங்கராசாரியா்கள் செய்த வியாச பூஜைக்கு கங்கை நீா் காசி மடத்து அதிபா் அனுப்பி வைக்கும் வழக்கம் இருந்ததையும் நினைவு கூா்ந்தாா்.
மேலும் சித்தியடைந்த காசி அதிபா் காஞ்சி காமாட்சி அம்மனின் பக்தா். வடநாட்டையும், தென் நாட்டையும் இணைக்கும் கலாசாராமாக விளங்கி சிறந்த கல்விப் பணிகள், சமயப்பணிகளை ஆற்றியவா் என்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவு கூா்ந்ததாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.