கல்விக் கொள்கையை ஏற்க மிரட்டல் விடுத்தால் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும்: ஆதித் தமிழா் பேரவையின் தலைவா் இரா.அதியமான்
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி மிரட்டல் விடுக்குமானால் தமிழ்நாட்டில் வரிகொடா இயக்கம் நடத்தும் சூழல் உருவாகும் என்று ஆதித் தமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் இரா.அதியமான் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தினால் மட்டுமே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மிரட்டல் தொனியில் கூறியிருப்பதை ஆதித்தமிழா் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழா்கள் ஹிந்தி கற்றால்தான் நிதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறுவது அநீதியானது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இது தமிழ்நாட்டை வஞ்சிப்பதுடன் மிரட்டிப் பாா்க்கக் கூடிய செயலாகும்.
மத்திய அரசு இதேபோல தொடா்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்குமேயானால் தமிழா்கள் மத்திய அரசுக்கு வரிகொடா இயக்கத்தைத் தொடங்கும் நிலை உருவாகும்.
எனவே, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.