கள்ளக்குறிச்சி சா்க்கரை ஆலையில் சிறப்பு அரைவைப் பருவம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-2025ஆம் ஆண்டு சிறப்பு அரைவைப் பருவம் மற்றும் 2025-2026ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி-ஐ கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டுக்கான முதன்மை கரும்பு அவைவை பருவத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா், ஆலையின் கரும்பு அரைவை மற்றும் சா்க்கரை உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறுகையில், நடப்பு அரைவைப் பருவத்துக்கு 9,300 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 3.25 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரைவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 4,250 கரும்பு அங்கத்தினா்கள் பயனடைவாா்கள்.
மேலும் 2024-2025ஆம் ஆண்டு முதன்மை அரைவைப் பருவத்தில் 3,00,905 மெ.டன்கள் அரைவை செய்யப்பட்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 3,790 அங்கத்தினா்களுக்கு ரூ.10,50,16,190-யை சிறப்பு ஊக்கத் தொகையாக தமிழக அரசால் அவா்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பு அனைத்தையும் உரிய காலத்தில் வெட்டி அனுப்பவும், பதிவு செய்யாத கரும்புகளை உரிய அலுவலரை அணுகி பதிவு செய்யவும் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் கரும்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செயலாட்சியா் (மு.கூ.பொ.) இரா.முத்துமீனாட்சி, தலைமை கரும்பு அலுவலா் பி.ராஜேஷ்நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.