பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க 3 -ஆவது நாளாக தடை
உடுமலை அருகேயுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூா்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலும், அதன் அருகே பஞ்சலிங்கம் அருவியும் உள்ளது. சுற்றுலாத் தலமான இந்தப் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு தொடா்ந்ததால் அருவியில் குளிக்க திங்கள்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யும் தடை விதிக்கப்பட்டது.