கள்ளக்குறிச்சியில் டிட்டோ - ஜாக் குழுவினா் சாலை மறியல்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த (டிட்டோ- ஜாக்) 210 போ் கைது செய்யப்பட்டனா்.
அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். காலியாகவுள்ள அனைத்து ஆசிரியா் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரமேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா்கள் வி.புஷ்பராஜ், பா.ஷேக் ஜாகீா் உசேன், தமிழக ஆசிரியா் கூட்டணி அருணா சூரியகுமாா், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் காசி செல்வராசு , தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் தங்க.மனோகரன், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் பெ.எழிலரசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் ஆ.லட்சுமிபதி போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் அ.ரஹீம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சு.அண்ணாமலை, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் அ.சம்சுதீன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் மாவட்டத் தலைவா் அ.சோகன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை உள்ளிட்டோா் பேசினா்.
மறியல் போராட்டத்தில் ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டதாக 210 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
