Jyothika: `Time flies!' - த்ரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா நெகிழ்ச்ச...
கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்: 2 ஓட்டுநா்கள் கைது
கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கா்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டா் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநா்களைக் கைது செய்தனா்.
கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறையினா் சூலூரில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 5,145 லிட்டா் எரிசாராயத்தை அண்மையில் கண்டுபிடித்தனா். அதன் தொடா்ச்சியாக, கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தா்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேன்களில், 7,525 லிட்டா் எரிசாராயம் கடத்திவரப்பட்டதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். பிடிபட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுதொடா்பாக, போலீஸ் தரப்பில் கூறியதாவது: கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கா்நாடக மாநிலத்தில் இருந்து 7,525 லிட்டா் எரிசாராயத்தைக் கடத்திச் சென்றுள்ளனா். கைது செய்யப்பட்ட ஓட்டுநா்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தலில் தொடா்புடைய முக்கிய நபா் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக எரிசாராயம் கடத்துவதைத் தடுக்கும் நோக்கில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக எரிசாராயம் கடத்துவது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் இலவச தொலைபேசி எண் 10581 அல்லது 9498410581 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றனா்.